ஸஃபர் மாதமும் இஸ்லாமும்
(மூட நம்பிக்கைகள்)
இஸ்லாம் ஒரு முழுமை
பெற்ற மார்க்கம். எல்லா நடைமுறைகளுக்கும் வழிகாட்டுதலும் அழகிய முன் மாதிரியும் இஸ்லாத்திலே
தவிர வேறெதிலும் முழுமையாகக் கூறப்படவில்லை.
எனவே இதைத் தவிர்த்து வேறு வழி முறைகளில் நாம் வெற்றி பெற முடியாது என் பது ஒவ்வொரு
முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையாகும். ஆனால் இன்னும் பல பகுதிகளில் பரிசுத்தமான இஸ்லாம்
அதன் பரிசுத்த வடிவில் கிடைக்கப் பெறாததால் அப்பகுதி வாழ் முஸ்லிம்கள் மாற்றார்களின் வழி முறையிலுள்ள மூடநம்பிக்கைகளை
அவை இஸ்லாத்தில் உள்ளதாக நினைத்து செய்து வருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
மேலும் சிறு வயதில்
(மக்தப்) ஆரம்ப பாடசாலையில் ஓதும் போதே கற்றுத் தரப்படும் “வல்கத்ரி கைரிஹீ வஷர்ரிஹி
மினல்லாஹி தஆலா” களா கத்ரும் (விதி) அதன் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் ஏற்படுகிறது”
என்ற ஈமானின் அடிப்படையை மறந்து அல்லாஹ்வை தவிர உள்ள ஏனைய பொருட்களுக்கும் காலத்திற்கும்
நேரத்திற்கும் நன்மை, தீமை தரும் சக்தியுள்ளது
என்று விளங்கினால் அது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாய் ஆகிவிடும்.
மலிந்துவிட்ட மூட
நம்பிக்கைகள்
அறிவியல் வளர்ச்சியடைந்த
இன்றைய நவீன யுகத்திலும் பாமரர்கள் படித்தவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே இந்த பாழாய்ப்
போன எத்தனையோ பல மூட நம்பிக்கைகளால் தங்களின் ஈமானை குறைபடுத்தி விடுகின்றனர். உதாரணமாக...
பயணம் செய்யும் போது
வீட்டை யாரேனும் பெருக்கினால் அப்பயணம் முழுமையடையாது. ஆந்தை கத்தினால் அங்கு மரணம்
ஏற்படும். அல்லது குறைந்த பட்சம் பெரும் நஷ்டம் ஏற்படும்.
ஆண்களுக்கு வலது கண்ணும்
பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்.
உள்ளங்கை,
உள்ளங்காலில் தோல் உறிந்தால்
பணம் கிடைக்கும்.
வீட்டு சுவற்றில்
அமர்ந்து காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள்.
வெளியே போகும் போது
எங்கே போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது.
இவ்வளவு ஏன்?
விமானத்தை இயக்க ஆரம்பிக்கும்
முன் எங்கோ நரி ஓடு வதைக்கண்ட விமானி ஒருவர்
அதை அபசகுனமாகக் கருதி அதை துரத்தினால் தான் விமானம் ஓட்டுவேன் என்று கூறிய சம்பவமும்
சமிபத்தில் நடந்துள்ளது...
இன்னும் இது போன்று அறிவிற்கும் பரிசுத்த இஸ்லாத்திற்கும்
அறவே சம்பந்த மில்லாத எத்தனையோ பல மூட நம்பிக்கைகள் முஸ்லிம்களிடம் மிகுந்திருப்பது
வேடிக்கையாகவும் பரிதாபமாகவும் உள்ளது.
ஸஃபர் மாதம்
இஸ்லாமிய மாதங்களின்
இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை பலர் பீடையாக கருதுகிறார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் நோய் வாய்ப்பட்டிருந் ததால் இது முஸீபத் நிறைந்த
மாதம், எனவே அம்மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடாது என்றும்
குறிப்பாக அதன் ஆரம்ப 13 நாட்கள் மிகவும்
துற்சகுணமுடையது என்றும் கருதி ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையை ஸஃபர் கழிவு என்றோ
ஒடுக்கத்து புதன் என்றோ கூறி, மா இலைகளில் அல்லது
தட்டுகளில் ஏதோ எழுதி கரைத்து குடித்தால் முஸீபத்துகள் நீங்கிவிடுவதாக கருதுகிறார்கள்.
மேலும் அன்று வீட்டில் இருக்கக் கூடாது. வீட்டிலிருந்தால் முஸீபத் ஏற்படும் எனவே வெளியே
எங்கேனும் செல்ல வேண்டும். புல்வெளி பகுதிகளுக்குச் சென்று கொஞ்சம் புற்களை மிதிக்க
வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இது போன்ற அடிப்படையில்லாத
இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத நம்பிக்கைகள் ஈமானை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் என்பதை
உணர வேண்டும். மட்டுமின்றி இது முற்றிலும் மாற்றார்களின் பழக்கமாகும். மாற்றார்கள்
ஆடி மாதத்தை பீடை மாதம் என்றும் அதில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கூடாது என்றும்
கருதும் பழக்கம் அப்படியே முஸ்லிம்களிடம் தொற்றியுள்ளது. இதன் மூலம் தூய மார்க்கமான
இஸ்லாத்தையும் தங்களின் ஈமானையும் இது போன்ற மூட நம்பிக்கைகளால் கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.
அறியாமைக் காலத்துப்
பழக்கம்
அறியாமைக் காலத்தில்
ஸஃபர் மாதத்தைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களிலும் மூட நம்பிக்கை பரவலாக இருந்தது.
அதை மக்கள் மனதிலிருந்து தகர்த் தெறியும் விதமாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
இப்படிக் கூறினார்கள். (“லா அத்வா, வலா தீரத,
வலா ஹாம்மத, வலா ஸஃபர”) “தொற்று நோயோ, துற்சகுனம் பார்ப்பதோ, ஆந்தை அலறுவது (அதனால் துன்பம் வரும் என்பதோ) ஸஃபர்
மாதம் பீடை என்பதோ இஸ்லாத்தில் கிடையாது” (நூல்
: மிஷ்காத்) என்று தெளிவுபடுத்தினார்கள். மேலும் ஹஜ்ஜத்துல் விதாவில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் “அறியாமைக் காலத்து மூடப்பழக்கங்கள் அனைத்தையும் இங்கே என் காலிற்கு
கீழ் புதைத்து விட்டேன்” என்று கூறினார்கள்.
அத்வா - தொற்றுநோய்
காலரா, குஷ்டம், கண் நோய் போன்ற நோய்கள் தொற்று நோய்களாக நம்பப்படுகின்றன.
உண்மையில் அது முதல் நபருக்கு எப்படி ஏற்படுகிறதோ அதே போன்று தான் இரண்டாம் நபருக்கும்
ஏற்படுகிறது. இறைவனின் அனுமதியின்றி ஒரு நோய் ஒருவருக்கு சென்றடையாது என்ற உண்மையை
முஃமின் நம்ப வேண்டும் என்பதற்காகத் தான் “தொற்று நோய் என்பது இஸ்லாத்தில் கிடையாது”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் குஷ்டமுடையவர்களிடமிருந்து
விலகியிருங்கள் என்று சில ஹதீஸ்களில் வருவது, அவ்வாறு அவர்களுடன் இருந்து அல்லாஹ்வின் கட்டளைப்படி
அந்நோய் இவர்களுக்கு வந்துவிட்டால் ‘அவர் நோய் தான் என்னைத் தாக்கி விட்டது’ என்ற தவறான
சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டு ஈமானில் குறை ஏற்பட்டு விடும் என்பதால் தான் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்களே தவிர இந்த ஹதீஸை வைத்து தொற்று நோய்
இருக்கிறது என்று கூறுவது தவறாகும்.
எனவே தான் தொற்று
நோய் கிடையாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது ஒரு கிராமவாசி
“யாரசூலல்லாஹ்! மானைப் போன்று அழகாக சுற்றித் திரிந்த ஒட்டகம் சொறிபிடித்த வேறொரு ஒட்டகத்துடன்
சேர்ந்ததால் இதற்கும் சொறிவந்து விட்டதே” என்று கூறினார். அதற்கு “அப்படியானால் முதல்
ஒட்டகம் எந்த சொறிபிடித்த ஒட்டகத்துடன் சேர்ந்ததால் அதற்கு சொறி வந்தது” என்று நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். (அதாவது எப்படி முதல் ஒட்டகத்திற்கு இறைவன்
நாட்டப்படி நோய் வந்ததோ அது போன்று தான் இரண்டாம் ஒட்டகத்திற்கும் வந்தது என்று புரிய
வைத்தார்கள்.) (நூல் : புகாரி)
தீரத - துற்சகுனம்
பார்ப்பது
அரபிகளிடம் ஒரு பழக்கம்
இருந்தது. ஏதேனும் முக்கிய வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்பு அல்லது பயணம் செய்யும் முன்பு
பறவையை பறக்க விடுவார்கள் அல்லது மானை துரத்துவார்கள். அப்பறவை நேராக பறந்தால்,
அந்த மான் வலப்புறமாக ஓடினால்
நாம் செய்யப் போகும் காரியம் வெற்றியடைந்துவிடும். இல்லையேல் பெரும் நஷ்டம் ஏற்படும்
என்று தவறாக நம்பிவந்தார்கள். இந்த தவறான எண்ணத்தை போக்குவதற்காக நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தில் துற்சகுனம் கிடையாது என்று கூறி களைந்தெறிந்தார்கள்.
மேலும் சகுனம் என்பது
நமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத்தவிர வேறில்லை. அல்லாமா இப்னுல் கைய்யிம்
(ரஹ்) அவர்கள் ‘சகுனம் என்பது அதை நம்பக்கூடியவர்களையும் அதை பயப்படுபவர்களையும்தான்
பாதிக்கும். மாறாக அதை ஒரு பொருட்டாகவே கருதாதவர்களுக்கு எதுவும் ஏற்படாது என்று கூறுகிறார்கள்.
ஹாம்மா - ஆந்தை அலறுவது
“மனிதன் இறந்த பிறகு அவனது உயிர் ஆந்தையினுள் புகுந்துவிடுகிறது. எனவே ஆந்தை எங்கு
கத்துகிறதோ அங்கு பெரும் நாசம் உண்டாகும் என்றும் மேலும் ஒரு மனிதர் கொல்லப்பட்டுவிட்டால்
அவனது தலையிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத மிருகம் வெளியேறி தண்ணீர் கொடுங்கள்,
தண்ணீர் கொடுங்கள் என்று கூறியவாறே
கொலை செய்தவனை பழி வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கும். அவன் எப்படியேனும் இறந்த பிறகு
அது மறைந்து விடும் என்று குருட்டுத்தனமான நம்பிக்கை அரபிகளிடம் நிலவி வந்தது. அதற்கு
ஹாம்மஹ் என்று கூறுவார்கள். இதைத்தான் மேற்கூறிய ஹதீஸில் ஹாம்மா (ஆந்தை கத்துவதால்
நஷ்டம் ஏற்படும்) என்பது இஸ்லாத்தில் கிடையாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்றும் கூட
ஆந்தை கத்தினால் நஷ்டம் ஏற்படும் என்று நம்பும் அறிவிலிகள் இதை சிந்திக்க வேண்டும்.
ஸஃபர் - பீடை மாதமா?
இஸ்லாத்திற்கு முன்பிருந்தே
சிறந்த மாதங்களான ரஷப், துல்கஃதா,
துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய கண்ணியமிகு மாதங்களை கண்ணிம் செய்யும்
பொருட்டு சண்டை சச்சரவுகள், போர்கள், நிறுத்தி வைக்கப்படும். பிறகு முஹர்ரமிற்கு அடுத்த
மாதமான ஸஃபரில் போர் தொடரப்படும். எனவே ஸஃபர் முஸீபத்துக்களும் ஆபத்துக்களும் வானிலிருந்து
இறங்கும் மாதம் என்றும் பீடை மாதம் என்றும் விளங்கி வந்தார்கள். இந்த எண்ணத்தை போக்கவே
ஸஃபர் - பீடை மாதம் என்பது இஸ்லாத்தில் கிடையாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.
யதார்த்த வாழ்க்கையில்
ஒவ்வொருவருக்கும் நல்லது நடப்பதும் கெட்டது நடப்பதும் அல்லாஹ்வின் விதியில் கட்டுப்படுவதாகுமே
தவிர மற்றவைகளுக்கு எதுவும் சக்தி கிடையாது என்பதை நம்புவது ஒவ்வொரு முஃமினின் கடமையாகும்.
அல்லாஹ்வைத் திட்டாதீர்கள்
மனிதர்கள் அறிந்து
கணக்கிட்டுக் கொள்வதற்காகத் தான் அல்லாஹ் நாட்களையும் மாதங்களையும் படைத்தான். அவைகளில்
நல்ல நாட்கள் என்றோ. கெட்ட நாட்கள் என்றோ எதுவும் கிடையாது.
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே காலம்
(காலத்தை படைத்து இயக்குபவன்)” (நூல் : முஸ்லிம்)
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சக்தியும், வல்லமையும் படைத்த அல்லாஹ் கூறினான் ; ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்.
காலத்தின் கைசேதமே! என்று கூறுகின்றான். எனவே உங்களில் ஒருவர் அவ்வாறு கூற வேண்டாம்.
ஏனெனில் நானே காலம் (அதைப் படைத்தவன்) அதில் இரவையும் பகலையும் நானே மாறிவரச் செய்கிறேன்.
நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி விடுவேன். பூமியை சுழலவிடாமல்
தடுத்து) நிறுத்தி விடுவேன்) என்று கூறினான். (நூல் : முஸ்லிம்)
ஸஃபர் - வெற்றியின்
மாதம்
எனவே மக்களின் நடைமுறையில்
கூறுவதைப் போன்று ஸஃபர் பீடை அல்ல. அதுவும் இறைவனின் மாதம் தான். எனவே தான் ஸஃபருக்கு
ஸஃபருல் முழஃப்பர் (வெற்றி தரும் மாதம்) என்று பெயர்.
மட்டுமின்றி ஸஃபர்
மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல காரியங்களை செய்துள்ளார்கள். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது, கைபர் போரில் வெற்றி பெற்றது, உம்முல் முஃமினீன் ஹள்ரத் ஸஃபிய்யாஹ் அவர்களை திருமணம்
செய்தது போன்று இன்னும் எத்தனையோ பல நல்ல விஷயங்கள் ஸஃபர் மாதத்தில் தான் நடைபெற்றதாக
வரலாறு கூறுகிறது.
எனவே இது போன்ற மூடத்தனமான
மூடப்பழக்க வழக்கங்களை கையாளும் வழக்கத்தையும் நம்பிக்கைக் கொள்வதையும் முஸ்லிம்கள்
அறவே தவிர்த்து தங்களது ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வே சக்தியுடையவன்
அல்லாஹ் கூறுகிறான்
“மனிதனே! ஏதேனும் ஒரு நன்மை உனக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்தே ஆகும். ஏதேனும்
ஒரு தீமை ஏற்பட்டால் அது உன்னி லிருந்தே (உன் கரத்தால் நீயே ஏற்படுத்திக் கொண்டதே)
ஆகும். (அல்குர்ஆன்-4:79)
மேலும் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் “ஏதேனும்
தீய விஷயத்தைக் கண்டால் அதை திட்டவோ காலத்தை குறை கூறவோ
செய்யாமல் கீழ்காணும் துஆவை ஓதும்படி கூறியுள்ளார்கள். இதை ஹள்ரத் உர்வதுப்னு ஆமிர்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“அல்லாஹும்ம லா யஃதீ பில் ஹஸனாத்தி இல்லா அன்த வலா யத்ஃபஉஸ் ஸய்யிஆத்தி இல்லா அன்த,
லா ஹவ்ல வலா குவத்த இல்லா
பில்லாஹ்” என்று ஓத வேண்டும். (அபூதாவூத்)
(பொருள் : இறைவா! நன்மைகள்,
தீமைகள் உன் அனுமதியின்றி
வருவதில்லை. தீமையை விட்டு விலகுதலும் நன்மை செய்யும் ஆற்றலும் அல்லாஹ்வின் உதவியைக்
கொண்டே தவிர இல்லை)
அடிப்பைகள் இரண்டு
எனவே முஃமின்களாகிய
நாம் எந்த விஷயத்தையும் கீழ்காணும் இரண்டு அடிப்படைகளை முன் வைத்துதான் செய்ய வேண்டும்.
1) அல்லாஹ்வோ அல்லது
அவனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கூறியிருக்க வேண்டும். 2)
சடங்காக இல்லாமல் மனத்தூய்மை
- இக்லாஸுடன் எந்த அமலையும் செய்ய வேண்டும். இதை விடுத்து காலம் காலமாக செய்யப்பட்டு
வருகிறது என்றோ முன்னோர்கள் செய்தார்கள் என்றோ ஆதாரமில்லாமல் எதையும் செய்தால் அதன்
மூலம் எந்த நன்மையும் கிடைக்கப் பெறாது மட்டுமின்றி பரிசுத்த இஸ்லாத்தை களங்கப்படுத்திய
குற்றம் தான் ஏற்படும்.
ஹள்ரத் இப்னு மஸ்ஊத்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்)
ஆகும். நடைமுறைகளில் சிறந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையாகும்.
காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களாகும்.
நூதன அனுஷ்டானங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்த்துவிடும்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புஹாரி)
No comments:
Post a Comment