உண்மையில் தூக்கம்
இறைவனின் மிகப்பெரும் அருட்கொடை. அதை மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஓர்
இயல்பான நிலையாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். மனிதன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு
தூக்கம் மிகவும் அவசியமாகும். அன்றாடம் தொடர்ந்து ஒருவன் பளுவான வேலையை செய்தால் கடுமையாக களைப்படைந்து போனாலும்
இரவில் ஒரு பகுதியில் தூங்கி எழுந்துவிட்டால் மீண்டும் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துவிடுகிறான்.
மனிதனின் இயல்பான தூக்கமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முறைப்படி அமைந்து
விட்டால் அவனது தூக்கமும் வணக்கமாகிவிடும்.
தூங்குவது
ஒரு கடமை
ஹள்ரத் அப்துல்லாஹ்
இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
என்னிடம் “அப்துல்லாஹ்வே! நீர் எல்லா நாட்களும் நோன்பு வைப்ப தாகவும் இரவு முழுவதும்
தொழுவதாகவும் உம்மைப் பற்றி கூறப்படுவது உண்மையா? என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.
அவ்வாறு செய்யாதீர். சில நாட்கள் நோன்பு வையுங்கள். சில நாட்கள் விட்டுவிடுங்கள்.
(சிறிது நேரம்) தூங்குங்கள், தொழுங்கள். ஏனெனில்
நீர் உமது உடலுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீர் உமது கண்களுக்கு செய்ய வேண்டிய
கடமையும் உள்ளது, நீர் உமது மனைவிக்கு
செய்ய வேண்டிய கடமையும் உள்ளது” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
முதலில் கூறப்பட்டுள்ள
ஆயத்தின் படி அல்லாஹுதஆலா தூங்குவதற்கு தோதுவான நேரமாக இரவை ஏற்படுத்தியுள்ளான். எனவே
தேவையான விஷயங்களிலும் இரவில் அதிக நேரம் ஈடுபடக்கூடாது. இரவில் சீக்கிரம் தூங்கி காலையில்
சீக்கிரம் எழுந்திருப்பது நபிமார்கள், நல்லோர்களின் வழமையாகும்.
இரவு ஆரம்பத்தில்
குழந்தைகளை வெளியே விடக்கூடாது.
ஹள்ரத் ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
இரவு ஆரம்ப நேரத்தில் குழந்தைகளை வெளியே விடாதீர்கள். அந்நேரத்தில் ஷைத்தான்களும் ஜின்களும்
சுற்றித்திரிவார்கள். குழந்தைகளை பறித்து விடுவார்கள் என்ற கூறினார்கள். (நூல் : புகாரி)
அதாவது குழந்தைகளின்
இயல்பு நிலை, இயல்பான சிந்தனைகளை
மாற்றி விடுவார்கள் அல்லது காணாமலாக்கி விடுவார்கள் என்பது இதன் கருத்தாகும்.
கதவுகளை
மூடிக்கொள்ள வேண்டும்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : இரவில் உங்கள் வீடுகளில் உள்ள பாத்திரங் களையும்
தண்ணீர் குவளைகளையும் மூடிக்கொள்ளுங்கள். மேலும் பிஸ்மில்லாஹ் கூறி கதவுகளை முடிக்
கொள்ளுங்கள். ஏனெனில் (இரவில்) பிஸ்மில்லாஹ் கூறி மூடப்பட்ட கதவுகளை ஷைத்தான் திறக்க
மாட்டான். (நூல் : புகாரி)
தூங்கும்
முன் வித்ரு தொழுகையை நிறைவேற்றுதல்
ஹள்ரத் அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “எனது நேசர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மூன்று விஷயங்களைக் கொண்டு என்னை உபதேசித்தார்கள். (1) மாதம் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
(2) ளுஹாத் தொழுகை,
(3) தூங்கும் முன்பு வித்ரு தொழுவது
(நூல் : புகாரி)
எனினும் யாருக்கு
தஹஜ்ஜுத் தொழும் பழக்கம் இருக்குமோ அவர்கள் தஹஜ்ஜுத் நேரத்தில் வித்ரு தொழுகையை தொழுது
கொள்வது சிறந்தது. ஏனெ னில் வேறொரு ஹதீஸில் வித்ரு தொழுகையை உங்கள் இரவின் கடைசி தொழுகையாக
ஆக்கிக் கொள்ளுங்கள் என்று வந்துள்ளது.
தூங்கும்
முன்பு உளூச் செய்வது
ஹள்ரத் பரா இப்னு
ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நீ படுக்கைக்குக் சென்றால் தொழுகைக்கு ஒளூ
செய்வதைப் போன்று உளூ செய்து கொள்ளவும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
ஹள்ரத் அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் உளூவுடன் இரவில் உறங்குகிறாரோ அவருடைய
உடலருகே ஒரு மலக்கு இரவைக் கழிக்கிறார். அவர் தூக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது
அல்லாஹ்வே உனது இந்த அடிமையை மன்னிப்பாயாக! ஏனெனில் இவர் உளூவுடன் தூங்கினார் என்று
அந்த மலக்கு துஆ செய்கிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல் : இப்னு ஹிப்பான்)
பெரும்பாலும் இஷாவிற்கு
பிறகு ஏதேனும் வேலைகள் இருக்கும். அதற்கு பிறகு தூங்கும் நேரம் வரும் போது உளூ செய்து
கொண்டால் நிம்மதியான அமைதியான தூக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் உளூ செய்வதால் உறுப்புகள்
இரத்த ஓட்டத்தால் சீராகி விடுகிறது. எனவே உடலில் ஒருவித அமைதி ஏற்படுகிறது. (நூல்: சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
விரிப்புகளை
உதறுவது
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கின்றார்கள்
: உங்களில் யாரேனும் படுக்கைக்கு வந்தால் தனது கீழாடையின் நுணியைக் கொண்டு பிஸ்மில்லாஹ்
என்று கூறி விரிப்புகளை தட்டிக் கொள்ளட்டும். ஏனெனில் அதில் என்னென்ன (பூச்சிக்கள்
தீமை தரும் விஷ ஜந்துக்கள்) இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (நூல்: முஸ்லிம்)
அக்கால அரபிகள் தங்களின்
படுக்கை விரிப்பை தூங்கி எழுந்த பிறகு எடுத்து வைக்க மாட்டார்கள். இன்றைய ‘பெட்’கள்
போல் விரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். மேலும் அவர்களிடம் உடுத்தியிருக்கும் ஆடைகளைத்
தவிர வேறு ஆடைகள் பெரும்பாலும் இருக்காது. எனவே உங்களின் கீழாடையின் நுணியில் படுக்கையை
தட்டிக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. எனவே இன்று நாம் படுக்கை எடுத்து உதற வேண்டும்
அல்லது வேறு துணியைக் கொண்டு நன்றாக தட்டி விட வேண்டும்.
தூங்கும்
நிலை
ஹள்ரத் ஹுதைஃபா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் நீங்கள்
தூங்கும் போது உங்கள் வலது கையை வலது கன்னத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றும்,
வேறொரு அறிவிப்பில் வலது புறமாக
நீங்கள் ஒருக் கணித்து படுங்கள் என்றும் கூறினார்கள். (நூல் : புகாரி)
குப்புறப்படுப்பதைத்
தவிர்த்து வேறு முறைகளில் தூங்குவது கூடும் என்றாலும் இந்த முறையில் படுப்பதுதான் சுன்னத்தாகும்.
இருதயம் மனிதனின்
இடது பக்கம் தான் உள்ளது. இடது பக்கம் ஒருக்கணித்து படுப்பதால் (Blood Circulation) இரத்த ஓட்டம் மந்தமாகிவிடுகிறது. வலது பக்கம் ஒருக்கணித்து படுப்பதால்
இந்த பிரச்சனை ஏற்படாது மட்டுமின்றி இருதயம் மற்றும் வயிற்றுக் கோளாறிலிருந்து மனிதன்
பாதுகாக்கப்படுவதாக யூ.கே. வின் ஓர் ஆராய்ச்சி நிலையம் தகவல் கொடுத்துள்ளது. மேலும்
வலது புறம் ஒருக்கணித்து படுப்பதால் இதயம் தொங்கவிடப்பட்ட பொருளைப் போன்று இருக்கிறது.
இதனால் மனிதனுக்கு வரம்பு கடந்த ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில்லை. சிறு சப்தம் கேட்டாலே
எழுந்து விடுவான். (நூல் : சுன்னத்தே நபவீ
அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
ஓதி ஊதிக்
கொள்வது
** ஹள்ரத் ஆயிஷா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கைக்கு
வந்தால் “குல்ஹுவல்லாஹு அஹது, குல்அஊது பிரப்பில்
ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்”
ஆகிய அத்தியாயங்களை ஓதி தன் இரு கைகளிலும் ஊதி தன் தலையிலிருந்து உடம்பு வரை தடவிக்
கொள்வார்கள். (நூல் : புகாரி)
** ஹள்ரத் அபூ மஸ்ஊத் அல்பத்ரிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பகரா அத்தியாயத்தின் கடைசி இருவசனங்களை யார் இரவில் ஓதுகிறாரோ அது அவருக்கு போதுமானதாகும்.
(அதாவது அதன் பரக்கத்தால் இரவில் அல்லாஹ் அவருக்கு பாதுகாப்பளிப்பான்) என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)
தஸ்பீஹ்
ஃபாத்திமா
ஹள்ரத் அலீ (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஹள்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தானே வீட்டு வேலைகள் செய்து
வந்ததால் அவர்களின் கைகள் காய்த்துப் போயிருந்தது. தன் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களிடம் அடிமைகள் வந்திருப்பதை கேள்விப்பட்டு வேலைத் துணைக்கு ஓர் அடிமை
வாங்கி வரலாம் என்று தந்தை யிடம் சென்றார்கள். அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் இல்லாததால் ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விட்டார்கள்.
பிறகு விஷயம் கேள்விப்
பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
என்னிடமும் என் மனைவி ஃபாத்திமாவிடமும் “நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ்
33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ்
33 தடவையும் அல்லாஹு அக்பர்
34 தடவையும் ஓதிக்கொள்ளுங்கள்.
அது உங்களுக்கு பணியாளர் (அடிமை) இருப்பதை விட உங்களுக்கு சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
(அதாவது இதை ஓதினால் நீங் கள் பகலில் வேலை செய்ததால் ஏற்பட்ட களைப்பை அல்லாஹ் நீக்கி
உங்களுக்கு சிறந்த ராஹத்தை கொடுப்பான்.) (நூல்
: புகாரி)
ஈமானோடு
மரணிக்கும் அந்தஸ்து
ஹள்ரத் பரா இப்னு
ஆஜிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:“நீ படுக்கைக்கு வந்தால் முதலில்
தொழுகைக்கு உளூ செய்வதைப் போன்று உளூ செய்து கொள். பின்பு உன் வலது புறத்தின் மீது
ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டு இப்படி ஓது “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க,
வவஜ்ஜஹ்து வஜ்ஹீ இலைக்க. வஃபவ்-வழ்த்து
அம்ரீ இலைக்க, வஅல்ஜஃது ழஹ்ரீ இலைக்க,
ரஃக்பதன் வரஹ்பதன் இலைக்க,
லா மல்ஜஅ வலாமன்ஜஅ மின்க இல்லா
இலைக்க, அல்லாஹும்ம ஆமன்து
பிகிதா பிகல்லதீ அன்ஜல்த்த, வபி நபிய்யிகல்லதீ
அர்ஸல்த்த” இவ்வாறு ஓதி தூங்கியபின் அவ்வாறே அந்த இரவில் நீ மரணித்து விட்டால் உன்
இயற்கை மார்க்க(மான இஸ்லா)த்தின் மீது நீ மரணிப்பாய். (முஸ்லிம்)
(பொருள் - அல்லாஹ்வே!
என்னை நான் உன்னிடத்தில் ஒப்படைத்துவிட்டேன். என் முகத்தை உன் பக்கம் முன்னோக்கிவிட்டேன்.
என் காரியங்களை உன்னிடத்தில் பொறுப்பு சாட்டிவிட்டேன். என் முதுகை உன்னிடம் தஞ்சம்
புக வைத்து விட்டேன். (அவை அனைத்தும்) உன் மீதுள்ள ஆதரவுடனும் அச்சத்துடனும் செய்து
விட்டேன். ஒதுங்கும் தலமோ தப்பிக்கும் தலமோ உன்னிடத்திலே தவிர இல்லை. அல்லாஹ்வே நீ
இறக்கிய வேதத்தின் மீது நான் ஈமான் கொண்டேன். நீ தூதராக அனுப்பிய நபியின் மீது நான்
ஈமான் கொண்டேன்.)
ஆயத்துல்
குர்ஸி ஓதுவது
ஹள்ரத் அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் இங்கு சுருக்கமாக தரப்படுகின்றது.
“என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸதக்காவின் பொருட்களை பாதுகாக்க நியமித்
திருந்தார்கள். இரவில் ஒருவன் அதிலிருந்து திருடினான். அவனை நான் பிடித்த போது தனது
ஏழ்மையை என்னிடம் கூறியதால் நான் விட்டுவிட்டேன். இரண்டாம் நாளும் அதே போன்று நடந்தது.
மூன்றாம் நாளும் அவன் வரவே அவனை நான் பிடித்தேன். இனிமேல் வரமாட்டேன் என்று நீ சொல்லியிருந்தும்
நீ வந்துவிட்டாய். இன்று நான் உன்னை விடப்போவதில்லை என்று கூறினேன்.
அவன் சொன்னான் உனக்கு
சில கலிமாக்களை சொல்லித் தருகிறேன். என்னை விட்டுவிடும் என்று கூறி நீ தூங்கச் சென்றால்
ஆயத்துல்குர்ஸியை ஓதிக் கொள்ளும். உமக்காக அல்லாஹுதஆலா ஒரு பாதுகாவலரை நியமிப்பான்.
காலை வரை எந்த ஷைத்தானும் உம்மிடத்தில் நெருங்க மாட்டான் என்று சொன்னான். நான் விட்டுவிட்டேன்.
காலையில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்விஷயத்தைக் கூறியபொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள் அவன் மிகப்பெரிய பொய்யன் ஆனாலும் இந்த விஷயத்தில் உம்மிடத்தில்
அவன் உண்மையை கூறிவிட்டான். அபூஹுரைராவே மூன்று இரவுகளும் உம்மிடத்தில் வந்து பேசியவன்
யார் தெரியுமா? என்று கேட்டார்கள்.நான்
தெரியாது என்றவுடன் அவன் தான் ஷைத்தான் (ஸதகாவின் பொருட்களில் நஷ்டத்தை ஏற்படுத்த அவன்
வந்தான்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)
ஸஹாபாக்கள் நற்காரியங்களில்
அதிக பேராசையுடையவர்களாக இருந்ததால் அவன் கூறிய நல்ல வார்த்தைகளைக் கேட்டு அவனை விட்டுவிட்டார்.
என்றாலும் அவன் கூறிய விஷயம் உண்மை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அனுதினமும் இரவில் படுக்கும் போது ஆயத்துல்குர்ஸியை ஓதிவந்தார்கள் என்று வந்துள்ளது.
குப்புறப்படுப்பது
ஹள்ரத் திக்பதுல்
ஃகிபாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் பள்ளிவாசலில் குப்புறப்படுத்திருப்பதைக்
கண்டு இது என்ன? ஏன் இப்படி படுக்கிறீர்கள்?
இது அல்லாஹ்விற்கு பிடிக்காத
மேலும் அல்லாஹ் கோபப்படுகின்ற தூக்கமுறையாயிற்றே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். (நூல் : இப்னு மாஜா)
ஹள்ரத் அபூதர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள் : இது (குப்புறப்படுப்பது) நரக வாசிகளின் படுக்கை என்று நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : இப்னுமாஜா)
‘குப்புறப்படுப்பதால் அந்நேரத்தில் செரிமான உறுப்புகள் மற்றும் தலையிலுள்ள சிறு
சிறு உறுப்புகள் முறையற்று மாறிவிடுகிறது. எனவே இவ்வாறு தொடர்ந்து படுக்கும் வழமையிருந்தால்
அம்மனிதன் எதையுமே மாற்றமாக சிந்திக்கும் பழக்கம் உடையவனாக மாறிவிடுகிறான். (நூல்:சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
கண்களுக்கு
சுர்மா இடுவது
ஹள்ரத் இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும் முன்பு
ஒவ்வொரு கண்ணிற்கும் மூன்று முறை “இஸ்மித்” என்ற சுர்மா இட்டுக் கொள்வார்கள். அதனால்
கண்களுக்கு பார்வை அதிகமாகும், தலைமுடிகள் சீக்கிரம்
வளரும் என்றும் கூறுவார்கள். (நூல் : ஷமாயில் திர்மிதி)
தூங்கும்
போது ஓதும் துஆ:
அபூ மஸ்வூத் அவர்களின்
ஹதீஸின் தொடரில் “பிறகு அவர் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூது வ அஹ்யா” ‘இறைவா! உனது பெயரைக்
கொண்டே நான் இறக்கி றேன். உன் பெயரைக் கொண்டே உயிர் வாழ்வேன்’ என்று ஓதிக் கொள்ளட்டும்
என்று வருகிறது. (நூல் : புகாரி)
தூக்கம்
என்பது சிறு மரணமே!
டாக்டர் அலிசன் என்பவர்
இது சம்பந்தமாக ஆய்வு செய்து இவ்வுண்மையை வெளிப்படுத்தியுள்ளார். தூங்கும் போது ஒவ்வொரு
மனிதரின் உடலிலிருந்தும் ஏதோ ஒன்று வெளியே செல்கிறது எனவும் சில நேரம் அது திரும்பி
வருவதில்லை எனவும் விவரித்துள்ளார். (நூல்
: சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
No comments:
Post a Comment